Saturday, April 23, 2011

இந்தியா தமிழனின் நாடா?


இதுநாள் வரையிலும் நானும் ஒரு இந்தியன் என்பதில் மிகுந்த பெருமை கொண்டிருந்தேன்.. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் என்று சிறுவயது பாடப்புத்தகங்களில் எழுதப் பட்டிருந்த வாசகங்களைப் புரியாத வயதில்  படித்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன்.   இப்போது என் நிலையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு கடந்த சிலவருடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னைக் கொதிக்கச் செய்கின்றன. இருந்தாலும் கையாலாகாத தமிழினத்தில் ஒரு மெல்லிய ஈனஸ்வரத்தோடு முனகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத என் நிலையை எண்ணி வெம்பிக்கொண்டிருக்கின்றேன்.

இதனால் நான் இந்திய இறையாண்மையை மீறிவிட்டேன் என்றால் அது குறித்து எந்தக் கவலையும் எனக்கு இல்லை. ஏனெனில் இன்றைய இந்தியாவில் தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனக்குழு எதுவென்றால் அது நம் தமிழினம்தான். துவேஷம் வளர்ப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை..எனினும் சில விஷயங்களைப் பற்றி சற்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் கோபம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..

பீடிகைகள் போதும் நேராக விஷயத்திற்கு வருவோம்.
சில வாரங்களுக்கு  முன்பு நான்கு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர் .. நன்றாகக் கவனிக்கவும் "தமிழக மீனவர்கள் " என்று நான் குறிப்பிடக் காரணம் 
நமது தேசிய ஊடகங்கள் அவ்வாறுதான் முன்பு குறிப்பிட்டன .. இறந்தது இந்திய மீனவனில்லையாம் தமிழ் மீனவனாம். ஆக துவேஷம் நம்மளவில் இல்லை.ஒட்டு மொத்த  நாடே நம்மை ஒதுக்கியாயிற்று. மிக்க மகிழ்ச்சி.. ( வேறு வார்த்தைகள் தேடினால் கெட்டவார்த்தைகள் தான் தோன்றுகின்றன) சரி கொல்லப்பட்டதன் காரணம் ? இலங்கை அணி கிரிக்கெட்டில் இந்தியாவிடம் உலகக்  கோப்பையை இழந்து விட்டதாம். இது நாளேடுகளில் வந்த செய்தி.இந்தக் காரணமானது எந்த அளவிற்கு நம்பகமானது என்பதில் சில ஐயங்கள் இருந்தாலும் , ராமநாதபுரம் கடல் எல்லையில் மீனவன் கொல்லப்பட்டால் அதன் காரணம் கண்டிப்பாக இலங்கை ஓநாய்ப் படையைத் தவிர யாராக இருக்க முடியும்.? 
















எதிரி நாடான பாகிஸ்தான் நம் நாட்டு மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் சென்றால் கைது செய்து முறையாக நம் நாட்டிற்கே திருப்பி அனுப்புகிறார்கள். குறைந்தபட்சம் கொல்வதில்லை. இதற்காக நான் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் ? அவன் ஒரு குஜராத்தி மீனவனோ அல்லது மராத்தி மீனவனோ தானே ? அவன் செத்தால் என்னவென்று நான் யோசித்ததில்லை.ஏனென்றால் நான் ஒரு இந்தியன் .
நான் மட்டும் ஏன் என்னை ஒரு இந்தியன் என்று நினைத்து இந்த நாறிப்போன தேசிய நீரோட்ட இறையாண்மை கருமாந்திரத்துக்குள் இணைத்துக் கொள்ளவேண்டும்?

கேனைத் தமிழர்களான நாம் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் .. 
ஒரிசா மழை நிவாரணத்திற்கு அதிக நிதி கொடுத்தது தமிழன்
குஜராத் பூகம்பத்திற்கு அதிக நிதி கொடுத்தது தமிழன் 
கார்கில் போர் இழப்பிற்காக அதிக நிதி கொடுத்தது தமிழன் 
இப்படி இந்த இந்தியாவில் தலையிலிருந்து கால்வரை எந்தப் பகுதியில் ஒரு இயற்கைப்  பேரிடரோ , போரோ ஏற்பட்டாலும் தனக்கு நிகழ்ந்ததாக எண்ணி கண்ணீர் வடிப்பவன் தமிழன்.

அதற்கு கைம்மாறாக இந்த ஒட்டு மொத்த இந்தியாவும் நம்மை ஒதுக்கிவிட்டது.  ஊடகங்களிலிருந்து அரசியல் வரை தமிழன் ஒரு தீண்டத்தகாதவனாகவும் தமிழனுக்கு நேரும் துன்பம் கண்டால் எந்த எதிர்வினையும்  காட்டாத நாடாக இந்தியாவும் மாறிவிட்டது. 



















நம் மீனவர்கள் கொல்லப்பட்ட விஷயத்திற்கு வருவோம். இந்த  சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அன்னை சோனியா காந்தி , நமது முதுபெரும் இனமானத் (தற்போது ஈனமான) தமிழர் கருணாநிதியோடு இணைந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். நமது மக்களுக்கு வாக்களித்தார் ..இனிமேல் கடலில் தமிழன் குருதி வீழாது என்று. சொல்லிச் சென்ற சிலதினங்களில் குருதி வாராமல் அடித்தே மூன்று பேரையும் முண்டமாக்கி ஒருவனையும் கொன்று  அனுப்பின அரக்க வம்ச சிங்கள ஓநாய்கள். சில மாதங்களுக்கு முன்பு மண் (எழுத்துப் பிழை அல்ல ) மோகன் சிங் இனிமேல் தமிழன் மீது துப்பாக்கிச்சூடு இருக்காது என்று வாக்களித்தார். உடனே ஜெயக்குமார் என்ற மீனவனின் கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்று அனுப்பின அந்த ............. ( இரக்கமில்லாத அரக்கர்களை எவ்வாறு திட்டுவது) பயல்கள் .ஒவ்வொருமுறையும் தமிழக மீனவன் கொல்லப்படமாட்டான் என்று இவர்கள் வாக்களிக்கும்போதும், எவ்வாறு தமிழக மீனவனைக் கொல்வது என்னும் உத்தியை சிங்கள ............. பயல்களுக்கு இவர்களே சொல்லிக் கொடுப்பது போலுள்ளது.

இலங்கையில் இது போன்று தொடர்ந்த அடக்குமுறைகளினால்தான் LTTE இயக்கம் தோன்றியது . அதன்பின்பு இந்தியா தலையிட்டதும் ராஜீவ் காந்தியின் அமைதிப்படை அத்துமீறியதும் தொடர்ந்த துன்பியல் நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்து சோனியா அன்னை கொண்ட பழிவாங்கும் படலமும் ஒரு இனத்தையே வேரோடு அறுத்துக் கொண்டிருக்கின்றது. இத்தனை நாள் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது தவறு என்று மறுதலித்த நம் இந்திய அரசு இன்று சொந்த நாட்டுக்காரனையே பாதுகாக்க தவறி இருக்கின்றது.
 2008 நவம்பர் 26  அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டத்திற்கு எந்த விதத்திலும் குறைவாகிவிடாது கடலில்  சிங்கள ....... பயல்கள் ஆடும் கொலைவெறித் தாண்டவம்.எதிரி நாடு என்று சொல்லி அடித்ததனால் சற்றே கடினம் காட்டிய இந்திய அரசு , நட்பு நாடு என்று சொல்லி அடிக்கும் இலங்கையைக் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் அடிவாங்குவது தமிழன் தானே. 

ஒற்றை படைவீரனைத் தாக்கியதற்காக பாலஸ்தீனம் மீது போர் தொடுத்த இஸ்ரேல் எங்கே? (இஸ்ரேல் ஒன்றும் உத்தமமான நாடு இல்லை. எனினும் தன் குடிமகனைக் காக்கும் அறவுணர்ச்சி பாராட்டப் பட வேண்டிய விஷயம்). சொந்த நாட்டு மக்கள் 500 பேரைக்  காரணமின்றி கொன்ற சுண்டைக்காய் நாடு இலங்கையிடம் கண்டிப்பு காட்டாத இந்தியா எங்கே?  ஒருகாலத்தில் CK நாயுடு கோப்பைக்காக தமிழக  அணியுடன் கிரிக்கெட் விளையாடிய  இலங்கை இன்று சீனா உதவியுடன் இந்தியாவின் காலைக் குத்திக் கொண்டிருக்கின்றது . 
என்ன ஒரு முரண் பாருங்கள் ராஜபக்சே குருவாயூர் செல்கிறான் , திருப்பதி செல்கிறான் விட்டால் கருணாநிதி தோளில் கை போட்டுக்கொண்டு தஞ்சாவூர் வருவான்.. நமது நாட்டில் அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வேறு ..! கொஞ்சமேனும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தால் நம் அரசாங்கம் இப்படி செய்யுமா? இன்று ராஜபக்சேவால் இந்தியா தவிர எந்த நாட்டுக்குள்ளும் நுழைய முடியாது ஏனெனில்  உண்மையிலேயே சொரணையுள்ள நம் ஈழத்தமிழர்கள் துரத்தி அடிப்பார்கள். 


















ஆனால் கோழைத் தமிழனான நமக்கு ஒரு கவலையும் இல்லை . நமக்கு வேண்டியதெல்லாம் இம்முறை மிக்சி கிடைக்குமா , லேப்டாப் கிடைக்குமா என்ற கவலைதான்.
நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் இனிமேல் இந்தியாவில் எந்த ஒரு பேரழிவோ , துயரோ நிகழ்ந்தாலும் ( நிகழக் கூடாது ) எந்த வகையான உதவியும் செய்யப் போவதில்லை .. என் இனம் சாகும்போது இந்தியாவில்  எவனும் ஒரு மயிரையும் பிடுங்கவில்லை.. நானும் அவர்களுக்காக ஒரு மயிரையும் பிடுங்கப்போவதில்லை . வாழ்க தமிழினம் ( அட போங்கப்பா )..!

படங்களுக்கு நன்றி : Google