Monday, June 21, 2010

சாரு நிவேதிதாவை ஏன் நிராகரிக்க வேண்டும்?

முதலில் இந்தமாதிரியான ஒரு பதிவை எழுத நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன். பொதுவில் யாரையும் தூற்றி எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மெல்லிய பகடி என்றால் நலமே.அதுவே கடுமையான தாக்குதலே தொழில் என்றால் அது அருவருக்கத்தக்கது.எழுதுவதற்கு ஒன்றும் தோன்றவில்லை என்றால் எழுதாமல் வெறுமனே இருந்துவிடுதல் உத்தமம்.அப்படியாகப் பட்ட தூற்றுதலையே தொழிலாகக் கொண்ட நபர்தான் சாரு நிவேதிதா. இவருடைய முழுமுதற் தொழில் ஜெயமோகனை நேரடியாகத் தூற்றுவது ,இல்லாவிடில் பினாமி பெயரில் மறைமுகமாகத் தூற்றுவது.

சில வாரங்களுக்கு முன் சாரு தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு இணைப்பை அளித்திருந்தார்.என்னவென்று பார்த்தால் அறிவுபுத்திரன் @ ஸ்டீபன் மாணிக்கம் என்னும் நபரின் ஜெயமோகத் தாக்குதல்கள்.(arivuputhiran.blogspot.com என்னும் தளம் தற்போது நீக்கப்பட்டுவிட்டது).

மேற்கூறிய நபர் தனிமனிதத் தாக்குதல்களாக அடுக்கியிருந்தார். அதாவது ஜெயமோகன் ஒரு மனநிலை சரியில்லாதவர்.அவரே இதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதே.

ஜெயமோகன் சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்து கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான நிலையையே இவ்வாறு சாரு அல்லது அவரது பினாமி குறிப்பிடுகிறார்.நிஜவாழ்வில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தடம் புரளும் எத்தனையோ பேர்களுக்கு மத்தியில் தன்னுடைய மன அழுத்தத்தின் மூலம் கொண்ட மன எழுச்சியை முறையாக இலக்கியத்தின்பால் திருப்பி உச்சம் அடைந்திருக்கும் ஜெயமோகன் மனநிலை சரியில்லாதவரா ? இல்லை அவரைத் தூற்றி யே புகழ் பெற நினைக்கும் சாரு போன்றவர்கள் மன நிலை சரியில்லாதவர்களா?

எனக்கு என்ன கோபம் என்றால் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி ஜெயமோகனைத் தாக்கி எழுதிவிட்டால் உடனே புகழ் பெறலாம் என்னும் வலைப்பதிவர்களின் குறுக்கு வழி யுக்தி குறித்ததே. நமக்கென ஒரு நடையை நாள்பட உருவாக்கிக்கொண்டால் தானாகப் புகழ் வரும் ,அன்றி எதிர்மறை அரசியல் புரிந்து புகழடைய நினைப்பது பேடித்தனம். நீ மட்டும் உத்தமனா இப்போது சாருவைத்தாக்கி எழுதுகிறாயே என்று கேள்வி எழலாம்.என்றாலும் குறுக்குவழியில் செல்ல நினைப்பவனின் யோக்கியத்தனத்தை யாராவது கூறியாகவேண்டுமே?

ஜெயமோகன் தன்னை ஒரு மனநோயாளி என்று ஒத்துக்கொண்டார் என்று கூறும் சாரு @ பினாமி நபர், சாரு தான் ஒரு " womanizer" என்று கூறிவிட்டு ஒரு குட்டிக்கரணம் அடித்து மறுத்தாரே இதை எந்தவிதத்தில் எடுத்துக் கொள்வது ?

ஜெயமோகன் மேல் வைக்கப்படும் மற்றுமொரு குற்றச்சாட்டு அவர் ஒரு இந்துத்வா ஆதரவாளர் என்பது. அவரது எழுத்துக்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும், அவர் கூற விரும்புவதன் சாராம்சம். எப்படி சாருவுக்கு தான் ஒரு " man of total contradictions" also "a womanizer" என்று கூற உரிமை இருக்கிறதோ அதேபோல் ஜெவுக்கும் தன் நிலைப்பாட்டைக் கூற விருப்பம் உள்ளது. இந்துமதம் என்பது ஒரு மதமே அல்ல, பண்டைய மக்களின் வாழ்க்கை நெறியின் தொகுப்பே இந்து மதமாக அறியப்படுகிறது என்ற உண்மை புரிந்திருந்தால் இந்துத்வா ஆதரவாளர் என்னும் கோஷம் வந்திருக்காது.

அப்படியெனில் சாரு நித்யானந்தாவை ஆதரித்தது , கண்மூடித்தனமாக புகழ் பாடியது எந்த விதத்தில் சேர்க்கலாம்? வாங்கிய காசுக்கு குரைத்துக் காட்டிய விசுவாசமோ?

ஜெயமோகனே பகடி என்னும்பெயரில் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் கிண்டல் அடித்துள்ளார் என்று கேட்கலாம்.இதுபோன்ற மென்பகடியையே ஒத்துக் கொள்ள மறுக்கும் தமிழ்ச்சமூகம் மாறவேண்டியுள்ளது.நம்மில் எத்தனை பேர் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மிமிக்ரி செய்து பகடி செய்கிறோம்? எத்தனை ஜோக்குகள் உருவாக்கியிருக்கிறோம் ? கலக்கப் போவது யாரு அசத்தப் போவது யாரு என்று நிகழ்சிகளைத் தடை செய்ய நம்மால் முடியுமா? ஆனால் அடிச்சா திருப்பி அடிக்கமாட்டான் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அடிக்கும் சட்டாம்பிள்ளைகளை எதைக் கொண்டு அடிக்கலாம்?

எந்த ஒரு எழுத்தாளனையும் வாசகர்கள் அந்தரங்க வாழ்க்கை கொண்டு எடைபோடுவதில்லை.மாறாக படைப்புகளின் ஆழம்தான் அவனின் அடையாளம்.அந்தவிதத்தில் ஜெயமோகன் சாருவைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்குகள் முன்னால் நிற்கிறார்.

கூர்ந்து கவனித்தால் சாருவின் மன ஆழத்திலிருக்கும் பொறாமைத்தீயே துவேஷ வார்த்தைகளாக வெளிவருகிறது.

எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்த ஒரு விஷயம்அறிவுபுத்திரன் வலைத்தளத்தில் பத்தில் ஒன்பது பேர் சாருவை நிராகாரித்து பின்னூட்டமிட்டுள்ளனர். வாசகர்கள் கொண்டாடும் எழுத்தாளர் நான் என்று கூறிக்கொள்ளும் சாருவிற்கு அந்தோ பரிதாபம் துணை வரக்கூட ஒரு பின்னூட்டமிடுபவர் இல்லை.மக்கள் அவரைப் பற்றி சரியாகப் புரிந்துள்ளனர் என்று எண்ணுகிறேன்.

மற்றபடி ஜெயமோகனின் படைப்புகளைக் குறித்து சாருவின் பினாமி குறை கூறியிருந்தார்.சரி அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் .ஆனால் சாரு படைப்பிலக்கியத்தில் எத்தகைய சாதனை படைத்துவிட்டார் என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

வெறும் சுய பீற்றல்கள், தம்பட்டம், நானொரு நல்லவன் வல்லவன் நாலும் தெரிந்தவன், ஒரு இடிதாங்கி,சுமைதாங்கி, தண்ணி டாங்கி, வெண்ணை என்று ஒரே அனத்தல்கள். இல்லாவிட்டால் காசு கேட்டு பிச்சை எடுக்கிறார். உயர்தர ஹோட்டல் பாரில் போய் குடிப்பாராம், ஆனால் நாய்குட்டிக்கு உணவு வாங்க காசில்லையே என்று பிச்சை எடுப்பாராம்.

அதையும் மீறி என்ன எழுதுகிறார் என்று பார்த்தால் சும்மா பச்சை வார்த்தைகளுக்கு தாவிவிடுகிறார் , காயடித்து விட்டார்கள், கு.....டியடித்து விட்டார்கள் , நடிகையின் கு...டியை நானா நக்கினேன்..? என்று சாணித்தாள் பேப்பர் சரோஜாதேவி புக் எழுத்தாளர் அளவுக்கு இறங்கிவிடுகிறார். இதுவா ஒரு இலக்கியவாதியின் அழகு..?

கேட்டால் நானொரு கட்டுடைப்பவன் என்ற விளக்கம் வேறு.

ஜெயமோகன் வலைத்தளத்தில் வாசித்ததிலிருந்துதான் அவரது புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன்.சாருவின் வலைத்தளத்தையும் வாசிக்கிறேன்.ஆனால் புத்தகங்கள் வாங்கும் எண்ணம் தோன்றவில்லை.ஒரு சோறு பதம்.

எனில் சாருவை ஒரு இலக்கிய உலகின் சுப்பிரமணியம்சாமியாகக் கருதி அவருடைய தூற்றல்களை நிராகரித்தோமானால் ஒருக்கால் இதில் கிடைக்கும் இன்பம் குறைந்து ஒருவேளை நல்ல படைப்புக்கள் அவரிடமிருந்து தோன்றலாம்.

(இலக்கிய உலகின் சுப்பிரமணியம்சாமி-இந்தச் சொலவடை குறித்து சாருவே தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு வரி குறிப்பிட்டிருந்தார்.என்றால் பட்டம் நன்றாக பொருந்துகிறது மனிதருக்கு .)

Tuesday, June 1, 2010

இமான்

முதல் முறை அவனைப் பார்த்த போது எதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. சாதாரண பையன்கள் போல இல்லை. ஒரு ஆறு வயது மதிக்கத்தக்க உருவம், கையில் ஒரு சின்ன தூக்குவாளியுடன், தோள்பட்டையுடன் இணைந்திருக்கும் நிக்கர் அணிந்து , சட்டை அணியாமல் நடந்து வந்தவன் முகத்தைப் பார்த்தேன்.குச்சி குச்சியாக சீனச் சிறுவர்கள் போல தலை முடி, கண்களும் அவ்வாறே மங்கோலிய பாணியில்.வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அவன் முகத்தைப் பார்த்தவுடன் இவனது பெயர் கண்டிப்பாக கணேஷ் என்று இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.அவன் கண்கள் எங்கள் வீட்டிலிருக்கும் பிள்ளையார் படத்திலிருப்பது போல் இருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.

சில நிமிடங்களில் அவனது அம்மா பின்தொடர்ந்து வந்தார்கள். நீங்கதான் இந்த வீட்டுக்கு புதுசா வந்திருக்கீங்களா/ என்று என் அம்மாவிடம் கேட்டார்கள்.பின்பு அவர்கள் பெயரையும் சொந்த ஊரையும் கூறி பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டார்கள். பையன் பெயர் இமான் என்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உண்டு என்றும் சொன்னார்கள். கணேஷ்... இமான்.... சம்பந்தமே இல்லை, இவனுக்கு கணேஷ் என்ற பெயர்தான் நன்றாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.

அம்மா விச்சு முட்டா என்றான். போய் அக்கா கடைல வாங்கிக்கோடா என்று சொன்னார் இமானம்மா.பின்பு அவனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனிப்பது என் வாடிக்கையாயிற்று.

இமான் சில வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருந்தான்.அம்மா அப்பா இன்னும் விச்சு முட்டா, விக்ஸ் மிட்டாய் தான் விச்சு முட்டா என்பான். அந்த வட்டாரத்தில் அவனை அனைவரும் அறிந்து வைத்திருந்தார்கள். அப்பா என்று அழைத்தால் அவனது அப்பா கோபப்படுவார். ஏனென்றால் இமான் அம்மாவின் முதல் கணவருக்குப் பிறந்தவன் , விவாகரத்தாகி மறுமணம் செய்து கொண்டவர்.இமான் அம்மா எங்களிடம் நல்ல பிரியமாக இருப்பார்.

இமானின் வார்த்தைகளில் எங்கள் பெயரும் சேர்ந்து கொண்டது, மாமா,அனு அம்மா ,அனு என்று என் தம்பியை அழைப்பான், அங்கா என்று என்னை அழைப்பான்.கண்ணா என்பது மருவி அங்கா ஆகிவிட்டது. என் அக்காவை எப்படி கூப்பிட்டான் என மறந்து விட்டது.

சிலநேரங்களில் காலையில் வீட்டுக்கு வருவான். அம்மா தோசையோ இட்லியோ கொடுப்பார்கள், அவனும் என் தம்பியும் சாப்பிடுவார்கள். அம்மா செய்யும் இடியாப்பம், ஆப்பம் போன்றவை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.தவறாமல் அவனுக்கும் சேர்த்து செய்வாள் அம்மா.எங்களுடன் சேர்ந்து விளையாடுவான்.ஏதாவது சொல்வான். ஒன்றும் புரியாது , இமான் அம்மா எங்களுக்கு அர்த்தம் சொல்வார்.நாங்கள் வந்த பிறகு இமான் நிறைய வார்த்தைகள் கற்றுக் கொள்வதாக இமானம்மா சொன்னார்.

ஒருநாள் அவன் வீட்டில் பெரும் சத்தம் கேட்டது, அவன் அப்பா திட்டிக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.அவன் அம்மா அழுது கொண்டிருந்தார். என்ன ஆயிற்று என்று கேட்டால் , இமானிடம் ஒரு நூறு ரூபாய்த் தாள் கொடுத்திருக்கிறார் அவன் அப்பா, இமான் சற்று நேரம் பார்த்து விட்டு சுக்கல் சுக்கலாக் கிழித்து எறிந்திருக்கிறான். அவன் அப்பா கோபத்தில் சாப்பாட்டுத் தட்டை எடுத்து எறிந்துவிட்டு வெளியே போய்விட்டார்.இமானுக்கு காசென்ன தாளென்ன என்று வித்தியாம் தெரியுமா..? அவனுக்கு தெரிந்த ஒரே காசு 50 காசுதான். கொடுத்தால் விச்சு மிட்டாய் கிடைக்கும்.சிறிது நேரம் அழுத அவன் அப்புறம் அம்மா விச்சு முட்டா என்று கடையை நோக்கி ஓடினான். அவனைப் பார்த்த அம்மா இன்னும் கொஞ்சம் அழுதார்.

அந்த வீட்டில் இன்னும் ஒரு வரவு வந்தது. இமானுக்கு ஒரு தம்பி பாப்பா வந்தான்.எங்களுக்கு விளையாடவும் பொழுது போக்கவும் குட்டிப் பையன் கிடைத்தான். சிலகாலங்கள் மகிழ்ச்சியாகச் சென்றது.

அவர்கள் வீட்டருகே நாங்கள் இருந்தது எட்டு மாதங்களே. அப்புறம் அப்பா வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்தார்.வீடு மாறிச் சென்றோம். சிலநாட்கள் கழித்து புதிய வீட்டுக்கு இமானுடன் குட்டிபையனையும் தூக்கிக் கொண்டு வந்தார்.

நாங்கள் வீடு மாறியவுடன் பூட்டிக் கிடந்த வீட்டில் காலையில் சென்று அனு .. அனு அம்மா என்று அழைத்தவாறே தட்டியிருக்கிறான்.விளையாடவும் பேசவும் ஆளில்லாமல் தவித்துப் போய்விட்டான் என்றார்கள். மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.என்ன செய்ய முடியும்.?

அப்புறம் எப்பொழுதாவது வீட்டுக்கு வருவார்கள், கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுப் போவான் .காலப்போக்கில் வரத்து குறைந்தது. ஒருநாள் நான் சைக்கிளில் சென்று பார்த்த போது அவர்கள் வீடு மாறிப் போய்விட்டிருந்தனர். அப்புறம் எந்த தகவலும் இல்லை.

ஒருநாள் அப்பா சொன்னார், இமான் அம்மாவிற்கு தொண்டையில் ஏதோ கட்டி வந்து மயக்கமருந்து கொடுத்தும் பலனின்றி ,உணர்விலேயே அறுவை சிகிச்சை செய்து இறந்து போனதாகவும், பின்பு வீட்டில் கொண்டு வந்து வைத்த பின்பு திடீரென்று நினைவு வர திரும்பி மருத்துவமனை கொண்டு சென்று பிழைத்துக் கொண்டதாகவும் சொன்னார்.அப்புறம் அவர்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள்.இமானைப் பற்றி நான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனேன்.

13 வருடங்கள் கழித்து படிப்பு முடித்து வேலை தேடும் படலத்தில் ,வாழ்க்கை வெறுத்து சோர்ந்து போய் பெங்களூரில் மெஜஸ்டிக்கிலிருந்து மடிவாலா செல்லும் பேருந்தல் ஏறி அமர்ந்தேன்.என் எதிர் இருக்கையில் ஒரு தாயும் மகனும் வந்து அமர்ந்தார்கள்.பையன் சிரித்தவாறே இருந்தான் வாயிலிருந்து அனிச்சையாக எச்சில் ஒழுகியது.தாயோ ஒரு கைக்குட்டையால் துடைத்து விட்டபடி இருந்தாள். பையனுக்கு இமானின் வயது இருக்கலாம், அதே போன்ற கண்கள்.என்னைப் பார்த்து அம்மாவிடம் எதோ சொல்லி ஒலியெழுப்பினான். நான் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும்.அவள் முகத்தில் ஒரு விதமான சங்கடத்தைக் கவனித்தேன். மேலும் அவர்களைப் பார்க்கத் திராணியின்றி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடியே வந்தேன்.ஏனோ பலவருடங்கள் கழித்து இமானின் முகம் என் நினைவுக்கு வந்தது.